Tuesday, June 29, 2010

நன்றி

தளத்தினை பார்வையுற்ற அனைவருக்கு நன்றி

ஆலய விழாக்காலம்

இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது. இந்நாளில் அருகிலுள்ள பல ஊர்களி்லிருந்து அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டவர்கள் செய்தவர்கள் வழிபாடு செய்து அன்னதானமும் அளிக்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் கிராமத்து மக்கள் நெடுங்காலமாக தங்கள் ஊரிலிருந்து மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து தங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலயத்தின் சிறப்பு

இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்களும் மற்றும் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது.இப்பகுதியைச்சுற்றி சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று சேரும் ஒரே இடம் இந்த ஆலயம் ஒன்றேஆகும்.இக்கிராமங்களில் திருமணம்முடிக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் இந்த ஆலயத்திற்கு தவறாமல் வந்து வழிபட்டு செல்கின்றனர்.மேலும் இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது

திருத்தள வரலாறு

குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெருங்காரையடிமிண்ட அய்யனார் திருக்கோயில் ஆசிய அளவில் பிரசித்தி பெற்ற 33 அடி உயரமுள்ள குதிரைச் சிலையைக் கொண்ட இக்கோயில் 1574-ல் கட்டப்பட்டதாகும்.1937-ல் இத்திருத்தலம் செப்பனிடப்பட்டதை கோயில் வரலாறு தெரிவிக்கிறது.1940 கால கட்டத்தில் குதிரை சிலை சேதம் அடைந்துள்ளதையடுத்து மறுசீரமைப்பு செய்ய முயன்ற போது அதன் வயிற்றுப் பகுதியை உடைக்க முடியாததால் அதன் மேலேயே மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. வானவெளியில் தாவிச்செல்லும் ஒரு குதிரையின் அங்க அசைவுகளுடன் காணப்படும் இந்த குதிரைதான் ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை என்கின்றனர்.சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் யானை சிலையும், எதிரில் அதே உயரத்தில் ஒரு குதிரை சிலையும் இருந்து பிற்காலத்தில் வில்லுனி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அதில் யானை சிலையை அடித்து சென்று விட்டது என்றும் இந்த குதிரை சிலை மட்டும் எஞ்சியுள்ளது என்றும் கூறுகின்றனர் இந்நிலையில், இக்கோயிலை சுமார் ரூ. 2 கோடியில் புதுப்பித்து குடமுழுக்கு நடத்த கிராமப் பொதுமக்கள் முடிவெடுத்ததைத் தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கின.கோயில் கருவறை,மஹா மண்டபம் ஆகியவை சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் தனிக்கோபுரத்துடன் விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார சாமிகளுக்கு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருள்களால் குதிரைச் சிலை வர்ணம் பூசப்பட்டுள்ளது.ஆலயத்தின் கருவறை கோபுரத்தில் தங்கக் கலசம் அமைக்க பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று கலசம் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் குடமுழுக்கு விழாவானது 23-05-2010௦ ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு விமர்சியாக நடைபெற்றது

Sunday, July 12, 2009

வரவேற்பு

குளமங்கலம்(English:Kulamangalam) கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி தாலுக்காவிலுள்ள மிக சிறப்பு மிக்க கிராமம் ஆகும். குளமங்கலம் என்ற கிராமம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு குளமங்கலம்,
தெற்கு குளமங்கலம்.
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது. இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை என வர்ணிக்கப்பட்டுள்ளது